அலகாபாத்: உத்திரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலில், பணியமர்த்தப்பட்ட 135 ஆசிரியர்கள் மற்றும் துணைநிலை ஆசிரியர்கள், கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் அடிப்படையில், நீதித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
தேர்தல் கமிஷனும், உத்திரப்பிரதேச காவல்துறையும், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று கூறியுள்ளது நீதிமன்றம்.
அமர்உஜாலா என்ற செய்தி ஊடகத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது நீதிமன்றம். எனவே, மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அடுத்துவரும் நாட்களில் நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட பஞ்சாயத்து தேர்தலில், அனைத்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டுமெனவும், அதேசமயம், வழிகாட்டுதல்கள் மீறப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணையை, மே 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.