சென்னை: அனைத்துக்கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் அரியர் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்துள்ளது. வரும் 17ந்தேதி முதல் அரியர் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசின் உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 7ந்தேதி விசாரணையின்போதுஉத்தரவிட்டது.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசுசார்பில், அனைத்துக்கல்லூரிகளிலும் அரியர் மாணாக்கர்களுக்கு ஆன்லைன் மூலம் அரியர் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், அதுவரை எந்த பட்டமும் வழங்கப்படாது சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த விசாரணையின்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்கள் நலன் கருதியே முன்பு அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், தற்போதைய நிலையில் கொரோனா சூழல் மாறியுள்ளதால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வுகளை நடத்தப் பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.