சென்னை:
நாடு முழுவதும் நாணயங்களை வாங்க பெரும்பாலானோர் மறுத்து வரும் நிலையில், 50 பைசா முதல் அனைத்து நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. மேலும்,
பண பரிமாற்றத்தின்போது, அனைத்து நாணயங்களையும் வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
சமீப காலமாக பல வணிகர்கள் நாணயங்களை வாங்க மறுத்து வருகிறார்கள். தற்போது புழக்கத்தில் உள்ள 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் ரூ.10 நாணயங்களை வாங்க பலர் மறுத்து வருகின்றனர். கடந்த வாரம் தமிழக போக்குவரத்து துறையிலும் 10ரூபாய் நாண யங்கள் வாங்கக்கூடாது என சுற்றறிக்கை வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கியது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த நிலையில் 50 பைசா முதல் அனைத்து நாணயங்களும் செல்லும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.
ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம் மற்றும் சமூகம், கலாச்சாரம் போன்றவற்றை மையமாக வைத்து நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த நாணயங்கள் நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும். அதேநேரத்தில் புதிய உருவங்களிலும், புதிய வடிவங்களிலும் நாணயங்கள் வெளியிடப்படும். இதனால் சில நேரங்களில் நாணயங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் நாணயங் களை வாங்க மறுக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம்.
அனைத்து வங்கி கிளைகளும் ரூபாய் நாணயங்களை பண பரிவர்த்தனைவயின் போது பெற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி, பணபரிவர்த்தனைக்கு சில்லறை நாணயங்களை பயன்படுத்த லாம். அத்துடன் வங்கி கிளைகளை நாணயங்கள் பெறப்படுகின்ற னவா என்பதை கண்காணிக்க மண்டல மேலாளர்கள் வங்கி கிளைகளுக்கு அதிரடியாக சென்று, கண்காணிக்க வேண்டும். நாணயங்கள் பெறப்படவில்லை என்றால் தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.