அனைத்து விளையாட்டுகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்த போது அவர்களுக்கு ஊரே திரள பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனநாயக கடமையைக் கூட செய்ய தவறிய மும்பை மக்கள் நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் செல்வந்தர்கள் தொழிலதிபர்கள் பின்னால் கூட்டம் கூட்டமாக சென்று ஆடிப்பாடி கேளிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சமூக வலைத்தளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் 11 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

ஏற்கனவே பிசிசிஐ சார்பில் 125 கோடி ரூபாய் டிப்ஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தைச் சேர்ந்த மற்ற விளையாட்டு வீரர்களை கடுப்பேற்றியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி உலககோப்பைக்கு இணையான தாமஸ் கோப்பையை வென்று இந்தியா திரும்பிய தனக்கு எந்த ஒரு கௌரவத்தையும் இந்த அரசு வழங்கவில்லை என்று கூறினார்.

மேலும், இது பணம் தொடர்பான விவகாரம் அல்ல அனைத்து விளையாட்டுகளையும் விளையாட்டு வீரர்களையும் சமமாக நடத்தவேண்டும் அவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கவேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.