டில்லி,

10வது வகுப்புவரை அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்று பாராளுமன்ற  குழு  தனது சிபாரிசு அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், ஜனாதிபதி முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் இந்தியில்தான் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி  நடைபெற்றபோது,   இந்தி மொழி பயன்பாடு தொடர்பாக ப.சிதம்பரம் தலைமையில் பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு ஆய்வுசெய்து தனது சிபாரிசுகளை  கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசிடம் தாக்கல் செய்தது.

அதில், ஜனாதிபதி, மத்திய மந்திரிகள் ஆகியோர் இந்தியிலேயே உரையாற்ற வேண்டும், பள்ளி களில் 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம் என்றும் சிபாரிசு செய்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த பாராளுமன்ற குழுவின் சிபாரிசு ஜனாதிபதி  ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போதுதான் ஜனாதிபதி அந்த சிபாரிசுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, இந்த சிபாரிசு  உடனே அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இனிமேல் மத்திய அரசின் பெரும்பாலான அறிவிப்புகள்  செயல்பாடுகள் அனைத்தும் இந்திலேயே இருக்கும். அதுபோல மத்திய அமைச்சர்களின் உரைகள் இந்தியிலேயே இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தி  தெரிய மாநிலங்களுக்கு மட்டுமே அதை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இதன் காரணமாக ரெயில்வே, விமான நிறுவனங்களில் இந்தி முதலாவது மொழியாகவும், தொடர்ந்து ஆங்கிலமும் பயன்படுத்தப்படும்.

மத்தியஅரசின் அனைத்து அறிவிப்புகளும் இனிமேல் இந்தியால்தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.