சென்னை

ழிபாட்டு தலங்களைத் திறப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் இன்று அனைத்து சமயத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

கொரோனா பரவுதல் அதிகரித்ததால் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது.  அதன்பிறகு வெகு நாட்களாகத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.   தற்போது ஐந்தாம்கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கையைப் பலரும் எழுப்பி வருகின்றனர்.  எனவே இது குறித்து அனைத்து சமயத் தலைவர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக்கூட்டத்தில் இந்து, இஸ்லாம், கிருத்துவர், ஜெயின் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.   ஒவ்வொருவருடனும் தனித்தனியே ஆலோசனை நடந்தது.

இந்து அமைப்புக்கள் சார்பில் கோவில்களைத் திறந்து டோக்கன் மூலம் பக்தர்களை அனுமதிக்கலாம்,  அபிஷேகம் மற்றும் பூஜை வேளைகளில் பக்தர்களை அனுமதிக்க கூடாது.  வரிசையில் வராமல் சமூக இடைவெளியுடன் வர வேண்டும் என ஆலோசனை வழங்கி உள்ளன.

தற்போது மற்ற சமய பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார்.  அனைத்து கருத்துக்களையும் அவர் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளார்.   முதல்வர் இந்த கருத்துக்களின் அடிப்படையில் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளார்.