டில்லி

கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா அச்சம் காரணமாகக் கடந்த மார்ச்25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  அப்போது இருந்து அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.   கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது.  எனவே ரயில் சேவை ரத்தும் தொடர்ந்தது.

அதன் பிறகு புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாகச் சிறப்புச் சேவைகள் மட்டும் இயங்கின.   தற்போது ஊரடங்கு விதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சிறப்புப் பயணிகள் ரயில்கள் குறிப்பிட்ட தடங்களில் இயக்கப்பட்டன  இந்நிலையில் வழக்கமான பயணிகள் ரயில் சேவை வரும் ஆகஸ்ட் 12 முதல் தொடங்கும் எனச் செய்திகள் வெளியாகின.

ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   அதையொட்டி அனைத்து வழக்கமான பயணிகள் ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பின்படி அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.