சென்னை: தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த பிளஸ்2 மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக, பிளஸ் மாணாக்கர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அவர்களின் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதையடுத்து, மதிப்பெண்களில் திருப்தியடையாதவர்கள் தனித்தேர்வு எழுதி மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, தனியாக தேர்வு எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நிலை கேள்விக்குறியாக இருந்தது. அவர்களுக்கு தேர்வு நடத்துவதா, தேர்ச்சி கொடுப்பதா என்பத குறித்து பள்ளிக்கல்வித்துறை விரிவாக ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து, தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17()-ன் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும்.
மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.