சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழகஅரசின் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டால், பலர் தற்கொலை முடிவை நாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து, தமிழகஅரசு ஆன்லைன் தடை சட்டம் இயற்றியது. இதற்கு ஆளுநரும் அனுமதி வழங்கி உள்ளார்.

இந்த நிலையில், ஆன்லைன் தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்து பல நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் தடை அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படாததால் வழக்கு தொடர எந்த காரணமும் இல்லை. அவசர சட்டத்துக்கு பதில் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது  என அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவசர சட்டம் அமலுக்கு வந்த பின் புதிதாக வழக்குகளை தொடர ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளன.

ஆன்லைன் விளையாட்டிற்க்கான தடை அவசர சட்டம் இன்னும் அமலுக்கு வராத காரணத்தால், வழக்கு போட வேண்டிய தேவை இல்லை என்பதாலும், சட்டம் அமலுக்கு வந்த பிறகு வழக்கு தொடுக்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய காரணத்தாலும் இப்போது அவசர சட்டத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் வழக்கு தொடுத்தவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.