பெங்களூரு: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 1முதல்  பெங்களூரு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம், அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று  கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவல்மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர்,  நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருகிறது. இதனால் கர்நாடகாவுக்கு வரும் அனைவருக்கும்  கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என்றவர், இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும்,  அதுபோல மாநிலத்திற்குள் வரும் அனைவருக்கும்,  ஆர்டி-பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 60%  பேர், மற்ற மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும்,   இந்த விதி பெங்களூருக்கு பயணிக்கும் அனைவருக்கும், மற்றும் அனைத்து போக்குவரத்து முறைகளுக்கும் பொருந்தும் என்றார்.

மேலும், தொற்று நோய் பாதிப்புக்குள்ளானவர்கள்  வீட்டை தனிப்படுத்தும் வகையில், வீட்டு தனிமைப்படுத்தலைக் கண்டறிய அறிமுகப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு பயன்பாடு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் , தொற்று பாதிப்பபட்டோரின் கைகளில் முத்திரை குத்தப்படும் என்றவர், இது தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி என்றார்.

மேலும், மண்டபங்களில் நடைபெறும் விழாக்கள், மற்றும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், பொதுஇடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்,  அனைவரும் முகக்கவசம்  மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவைப்பட்டால், தொற்றுநோயை எதிர்த்துப் போராட அதிக ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

மாநிலத்தில் முகமூடி அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றுநகர்ப்புறங்களில் முகமூடி அணியாததற்கு அபராதம் ரூ .250, கிராமப்புறங்களில் ரூ .100 அபராதமாக வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.