சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை, பாஜக, தமாகா, நாம்தமிழர் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க லெட்டர் பேடு கட்சிகள் உள்பட  சுமார் 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்த நிலையில், முக்கிய கட்சிகளான பாரதிய ஜனதா, தமிழ்மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

 தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பொதுவாக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கும் தமிழ்நாடு அரசு, இந்த முறையாக, லெட்டர் பேடு கட்சிகள் உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், மற்றொரு லெட்டர் பேடு கட்சியான, தேசிய மக்கள் சக்தி கட்சி தங்களுக்கு அழைப்பு வரவில்லை என கூறி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தொகுதி சீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சென்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கோட்டை வட்டார  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து கட்சி கூட்டம் ஏன்?

நாட்டில் உயர்ந்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி, மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

அதாவது மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.

அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் நாடாளு மன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாகவும், அதை செயல்படுத்தாதால் நிதியை வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதேபோன்று பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.

ஆனால்,  கடந்த பிப்.26ம் தேதி தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறையும் என்ற கருத்தை முழுமையாக மறுத்ததுடன், தொகுதிகள் குறையாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.