டில்லி,
2018 முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் அவசர கால பொத்தானுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டே இதுகுறித்து மத்திய அரசு புதிய விதிகளை உருவாக்கி அதை அரசு கெசட்டிலும் வெளியிட்டிருந்தது.
அதையொட்டி நேற்று மத்திய தொலைதொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த ஆண்டு முதல் அனைத்துவகையான மொபைல் போனிலும் ஜிபிஎஸ் வசதியுடன் அவசர கால பட்டன் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆபத்து காலத்தில் உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவலாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இந்த தருணத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதத்தில் எந்தவொரு அவசர சூழ்நிலையிலும், ஆபத்திலும் பெண்கள் செல்போன் மூலம் போலீசை எளிதாக தொடர்பு கொண்டு, அவர்களின் உதவியை நாடும் வசதியை ஏற்படுத்தி தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி, 1-ந்தேதி, 2018 முதல் விற்பனைக்கு வரும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ ஜிபிஎஸ் வசதியுடன் இருக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மத்திய தொலைதொடர்பு துறை செயலாளர் அரவித் சாவ்லா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்திருந்தபடி, தற்போது உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் இந்த அவசர உதவி பட்டன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.