டெல்லி: உக்ரைன் தலைநகர் கிவ்-ஐ விட்டு வெளியேறுங்கள் என அங்கு சிக்கியுள்ள இந்தியர்களுக்கு,. இந்திய தூதரகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் களமிறங்கி உள்ளதுடன், நேட்டோ படைகளும் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நேற்று பெலாரசில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்குவோம்” நேட்டோ தலைவரும் தெரிவித்துள்ளார். இதனால் கடுமையான கோபத்தில் உள்ள ரஷ்யா அதிபர் புதின், அணுஆயுத படைகளை தயாராகும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக போர் மேலும் உக்கிரம் அடையும் என்று கூறப்படுகிறது. மேலும் ரஷிய படைகள் உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து வருகிறது. இதன் காரணமாக கீவ்-ல் சிக்கி உள்ள இந்தியர்கள், மாணவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னதாக, மத்திய அமைச்சர்கள் 4 பேரை அண்டை நாடுகளுக்கு அனுப்பி, இந்தியர்களை மீட்கும் பணியை மத்தியஅரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், அங்கு தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், மாணவர்கள் உட்பட அனைத்து இந்திய பிரஜைகளும் இன்று அவசரமாக கிவ்வை விட்டு கிடைக்கக்கூடிய ரயில்கள் அல்லது கிடைக்கக்கூடிய வேறு வழிகள் மூலம் வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.