சென்னை: அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் மாநில இடஒதுக்கீட்டுக்கு பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது தொடர்பாக, குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின்போது உத்தரவிட்டது.
ஆனால், மத்தியஅரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக தரப்பில், மத்தியஅரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்ககு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு மத்தியஅரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இருக்கிறது, மாநிலஅரசின் கல்லூரிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய தலைமைநீதிபதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்தியஅரசுக்கு ஒதுக்கியபின், அதில் தமிழ்நாடு இட ஒதுக்கீடுக்கு எப்படி பெற முடியும், என கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரத்தில் மத்தியஅரசுதான் முடிவு செய்ய முடியும். அந்த இடஒதுக்கீட்டில் மீதமிருந்தால், அவற்றை மாநிலங்களுக்கு திரும்ப வழங்கப்பட்டால் மட்டுமே அதனை மாநில அரசு பின்பற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மீண்டும் வாதாடிய திமுக வழக்கறிஞர் வில்சன், தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
அதையடுத்து மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், மருத்துவப் படிப்புகளில் அனைத்து மாநில மாணவர்களும் பயனடைய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அகில இந்திய ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதாகவும், தகுதி அடிப்படையில் மட்டுமே அந்த இடங்கள் நிரப்பப்பட்டதாககவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2017-18ஆம் ஆண்டு முதல் பட்டியலினத்தவர்களுக்கு 15 விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியவர், அகில இந்திய ஒதுக்கீடு என்பது அகில இந்திய கொள்கை என்பதால், அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்குதான் அதுபொருந்தும் என்றும், மாநில அரசு இட ஒதுக்கீடு பொருந்தாது என விளக்கினார்.
மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநிலங்களின் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது மாணவர் சேர்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக்கூறிய நடராஜன், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு மத்தியஅரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றும் தமிழ்நாடு அரசு, இதர பிற்படுத்தபட்டவர்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீட்டை எப்படி பின்பற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.,
வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்டு 17ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.