சென்னை:
“அகில இந்திய வானொலியில் இனி இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி ஆகிய மொழியில் மட்டுமே செய்திகள் ஒலிபரப்பாகும். தமிழ் உட்பட பிற மொழி செய்திகள் நிறுத்தப்படுகிறது” என்று அகில இந்திய வானொலி சார்பாக அறிவிப்பு வந்திருக்கிறது.
இதைக் கண்டித்து வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிக்கைவிடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அகில இந்திய வானொலி வட்டாரத்தில் விசாரித்தோம்.
பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், “ஒட்டுமொத்தமாக தமிழ் செய்திகள் ஒலிபரப்பு ரத்து என்பதாக நினைப்பது தவறு. டில்லியில் இருந்து தமிழ் உட்பட, மாநில மொழிகளில் ஒலிபரப்பாகிவந்த செய்திகள்தான் நிறுத்தப்படுகின்றன. அதாவது “ஆகாசவானி செய்திகள்” என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்குமே அந்த செய்திகள். அதே போல தமிழைப் பொறுத்தவரை சென்னை நிலையத்தில் இருந்துதான் தொடர்ந்து செய்திகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இது தொடரும்.
அதே நேரம், திருச்சியில் இருந்து மதியம் ஒலிபரப்பாகும் செய்திகள் நிறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக மற்ற செய்திகளைப்போல இந்த நேர செய்தியும் சென்னை வானொலியில் இருந்து மற்ற நிலையங்களுக்கு அஞ்சலாகும். ஒட்டுமொத்தமாக தமிழ் செய்திகளை நிறுத்திவிட்டதாக நினைப்பது தவறு” என்றார்.