சென்னை: இளநிலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ( 27 ஆம் தேதி ) இன்று தொடங்குகிறது. மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 14ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும். மேலும், மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் ’https://mcc.nic.in/UGCounselling’ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள 15% எம்பிபிஎஸ்,பிடிஎஸ் இடங்களில் தமிழகத்தில் 547 எம்பிபிஎஸ் இடங்களும், 15 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.
அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்க, அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ஆம் தேதிவரை கட்டணங்களை செலுத்தலாம் எனவும், மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்ய உள்ள கல்லூரிகளின் இடங்களை ஆன்லைன் மூலம் அக்டோபர் 28 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 5 ஆம் தேதி இறுதியாக இடங்கள் அறிவிக்கப்படும். மாணவர்கள் கல்லூரிகளில் நவம்பர் 6 முதல் 12 ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.
அதேபோல், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க நவம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை கட்டணங்களை செலுத்தவும், நவம்பர் 19 முதல் 22ஆம் தேதி வரை கல்லூரி இடங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக ஒதுக்கீடு நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டு, நவம்பர் 25ல் இறுதி இடங்கள் அறிவிக்கப்படும். நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
அதற்குள் சேராமல் காலியாக இருக்கும் இடங்கள், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.