டெல்லி: ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி கோரி அகில இந்திய தனியார் பள்ளி அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.
லாக்டவுன் காரணமாக, நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தனியார் பள்ளிகளின் அகில இந்திய அமைப்பு கூறி உள்ளது. தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஐந்து மாதங்களுக்கு பிற செலவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடினமாக உழைத்த ஆசிரியர்கள், கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர் என்று தனியார் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் நல சங்க தேசியத் தலைவர் சையத் ஷமெயில் அகமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளிகளின் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களால் இதே போன்ற கடிதங்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் ஜூன் 30க்குள் 20 லட்சம் கடிதங்கள் வர வாய்ப்புள்ளது என்று அகமது கூறினார்.
நாங்கள் உங்கள் உதவியை நாடுகிறோம், நீங்கள் எங்களை ஏமாற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறோம். ஆன்லைன் கற்பித்தலில் சமரசம் செய்யாமல் போராடும் தனியார் பள்ளிகளின் பள்ளி கணக்குகளுக்கு தயவுசெய்து நிதியை தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீவிரமான விஷயத்தை ஆழமாக ஆராய்ந்து, பல குடும்பங்கள், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக சம்பளம் வழங்க தனியார் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் சாதகமான முடிவை எடுக்குமாறு நாங்கள் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.