சென்னை: தனது பந்துவீச்சில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு தான் மட்டுமே முழுமையான காரணம் என்று தெரிவித்துள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

சமீபத்தில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் வாய்ப்புப் பெற்ற முகமது சமி, சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் எடுத்த ஷமி, உலகக்கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார்.

அவர், இந்த உலகக்கோப்பையில் இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி மொத்தம் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

வீட்டில் நடந்த பிரச்சினைகளில் சிக்கி, புகாருக்கு உள்ளாகி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறான சர்ச்சைகளில் சிக்கி இன்னல்களுக்கு ஆளானார் ஷமி. டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படாமல் வெளியே உட்கார வைக்கப்பட்டார்.

எனவே, அதையெல்லாம் ஒரு தனியாளாக கடந்துதான் மீண்டும் சரியான நிலைக்கு வந்துள்ளார் ஷமி. உலகக்கோப்பையில் புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார். எனவே, தனது இந்த நிலைக்கு, தான் மட்டுமே காரணம் என்றுள்ளார் ஷமி.