ரோம்
இத்தாலி நாட்டில் பெர்காமோ நகரில் உள்ள பாபா குளோவான்னி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.
உலகில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்த நாடுகளில் இத்தாலியும் ஒன்றாக இருந்து வந்தது. இங்கு சுமார் 137 நாட்களுக்கு முன்பு முதல் நோயாளிக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது. இங்கு மொத்தம் 2.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 34,926 பேர் உயிர் இழந்தனர். அதையொட்டி அங்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போது இத்தாலியில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது. இங்கு நேற்று 29 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிர் இழந்துள்ளனர். இத்தாலி நாட்டில் பெர்காமோ நகரம் கொரோனாவின் ஊற்றுக் கண என அறியப்பட்டது. இந்நகரத்தில் தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து வந்தது. இதையொட்டி இங்கு சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
இந்நகரில் உள்ள பாபா குளோவன்னி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்தது. இதையொட்டி இங்கு 400 மருத்துவர்கள், செவிலியக்ரள், உதவியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த மருத்துவமனையில் சுமார் 6000 பேர் உயிர் இழந்தனர். இங்கு உயிரிழந்தோருக்கு ஈமச் சடங்கு செய்ய நேரமின்றி புதைக்கப்பட்டனர்.
தற்போது இத்தாலியில் நிலைமை சீரடைந்துள்ளது. இத்தாலியின் பாபா குளோவன்னி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். சாதாரண வார்டுகளில் உள்ளோருக்கு நடத்தப்பட்டுள்ள பரிசோதனையில் பாதிப்பு இல்லை என முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.