விஜயவாடா
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தெலுங்கு மற்றும் உருது அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைத்ததில் இருந்து பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். நாட்டில் முதல் முறையாக ஆந்திர மக்களுக்குத் தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். தற்போது அரசுப் பள்ளிகள் குறித்து ஒரு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.
ஆந்திர மாநில அரசு இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆந்திர மாநிலப் பள்ளிக் கல்வித்துறை தனக்குக் கீழ் வரும் அனைத்து அரசுப் பள்ளிகள், மண்டல் ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளில் உள்ள வகுப்புகளை ஆங்கில வழிக் கல்விக்கு மாற்ற முடிவெடுத்துள்ளது. இதையொட்டி வரும் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.
ஆந்திர அரசு இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அரசு பிரத்தியேக அதிகாரங்களை வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தின்படி 5 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தெலுங்கு, உருது மீடியங்களுக்கு இணையாக ஆங்கில மீடிய வகுப்புகளையும் தொடங்கலாம்.
ஆசிரியர்களுக்கு இதற்காக ஆங்கிலப் பயிற்சிகள் வழங்கப்படும். அத்துடன் ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை பரிசோதிக்கப்பட்டு புதிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அத்துடன் தெலுங்கு அல்லது உருது கட்டாயப் பாடமாக அமைக்கப்பட வேண்டும். இந்த அரசாணைக்கு இணங்க, ஆங்கில மொழிக் கற்பித்தல் மையங்களும் மாவட்ட ஆங்கில மையங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.