அலிகார்:
அலிகாரில் இரண்டரை வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது, ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உத்திரப்பிரதேச போலீஸார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை ரூ.10 ஆயிரம் கடனை தராததால், சிறுமியை கடத்தி கொலை செய்து குப்பை கிடங்கில் எறிந்துள்ளனர்.
தொடர்ந்து தொலைபேசி உரையாடல்லைகளை ஆய்வு செய்ததில், அஸ்லாம் (43), ஜாகித் (27) ஆகியோர் சிறுமியை கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து இருவரையும் கைது செய்துள்ளோம்.
சிறுமி காணாமல் போனபிறகு, 3 நாட்கள் கழித்து அழுகிய நிலையில் பிணமாக மீட்டோம்.
கைதானவர்களில் ஒருவர், ஏற்கெனவே 2 முறை பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. டெல்லியில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சிறுமி கொலையில் வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
இதனையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்ததாக 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தடயவியல் நிபுணர்களும் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட சிறுமிக்காக மாணவ, மாணவிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
விரைவு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.