பீஜிங்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதி உதவியை அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மா வழங்கி உள்ளார்.

கொரோனா வைரஸ் என்னும் உயிர்க்கொல்லி வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உருவானதாகக் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அந்நாடெங்கும் பரவி தற்போது வெளிநாடுகளுக்கும் பரவி வருகிறது.  இந்த வைரசுக்கு இதுவரை 210க்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர்.  பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சுமார் 1 கோடிக்கும் அதிகமான வுகான் நகர மக்கள் வெளி வர முடியாத நிலை உண்டாகி இருக்கிறது.  அந்த நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு மருத்துவமனையைச் சீன அரசு 10 நாட்களில் கட்டி முடித்துள்ளது.  உலகின் வேறு சில நாடுகளிலும் கொரொனா வைரஸ் பரவி உள்ளது தெரிய வந்ததால் உலக சுகாதார நிறுவனம் நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளது.

இந்த வைரசுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.   சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் அதிபர் ஜாக் மா தனது தொண்டு நிறுவனத்தில் இருந்து ரூ.100 கோடியைச் சீன அரசுக்கு வழங்கி உள்ளார்.

சீன அரசு இதில் ரூ.41 கோடியை தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியைச் செய்து வரும் இரு அரசு ஆராய்ச்சி நிறுவனாக்களுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.   இது போக மீதத் தொகையை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் செலவுக்காகப் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.