துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் போட்டிகளுக்கு நடுவராக(அம்ப்பயர்) இருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் நடுவர் அலீம் தர்.
பாகிஸ்தான் – ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஒருநாள் போட்டி, இவரின் 210வது ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம், தென்னாப்பிரிக்க நடுவர் ரூடி கோயர்ட்ஸின் அதிக ஒருநாள் போட்டி நடுவர் என்ற சாதனையை முறியடித்துள்ளார் தர்.
ஏற்கனவே, மொத்தம் 132 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக இருந்து, அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக இருந்தவர் என்ற சாதனையும் இவரிடம் உள்ளது.
இந்தவகையில், உலக அளவில் மொத்தமாக 387 சர்வதேசப் போட்டிகளுக்கு நடுவராக இருந்தவர் என்ற ஒட்டுமொத்த சாதனையையும் வைத்துள்ளார்.
மேலும், டி-20 போட்டி என்று வருகையில், மொத்தம் 45 போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார் தர். இது, இவரின் சக பாகிஸ்தான் நடுவர் அஸான் ரஸாவைவிட ஒரு போட்டி குறைவாகும்.
“டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றியுள்ளேன் என்ற கெளரவம் மிக உயரியது. இதற்காக, ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கிறேன் மற்றும் கற்றுக்கொள்கிறேன்” என்றுள்ளார் அலீம் தர்.