புதுடெல்லி :
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழி செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா பற்றி விவாதிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.
மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம், ஒரு வார பயணமாக அமெரிக்கா சென்று அங்குள்ள போக்குவரத்து விதிமுறைகள் பற்றி நேரில் அறிந்து வந்தார்.
அமெரிக்கா போல இந்தியாவிலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு, கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே கூறி இருந்தார்.
தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள மோட்டார் வாகன திருத்த மசோதாவில் உள்ள ஷரத்துக்கள் வருமாறு:
- குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம்.
- வாகனத்தால் மோதினால் ரூ.2 லட்சம் இழப்பீடு.
- சாலை விபத்தால் இறந்தவருக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு.
- காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அபராதம், 3 ஆண்டு சிறை.
- ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால் ரூ.2,000 அபராதம், 3 மாதத்துக்கு லைசென்ஸ் ரத்து.
- சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபத்து போன்றவற்றுக்கு அவர்களின் காப்பாளர் அல்லது வாகன உரிமையாளரே பொறுப்பாவார்.
அவர்களுக்கு தண்டனை வழங்கவும், சம்பந்தப்பட்ட வாகன பதிவு ரத்து செய்யவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இதுகுறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்:
இந்த மசோதாவால் பல லட்சம் அப்பாவி மக்களின் உயிர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், சாலை பாதுகாப்புக்கான மிக முக்கிய மைல்கல்லாக இந்த மசோதா இருக்கும். மேலும் 18 மாநில போக்குவரத்து அமைச்சர்கள் பரிந்துரையின்படி இந்த மசோதாவில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை அபராதம் விதிப்பது உட்பட பல்வேறு ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன’ என்றார்.