திருச்சி: தமிழ்நாட்டில் சாராய ஆட்சி, கஞ்சா ஆட்சி தான் நடக்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விமர்சித்தார். நிகழ்ச்சியில் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மாநிலத்தில் ஆட்சி செய்வதற்கான நம்பகத்தன்மையை திமுக இழந்துவிட்டது என கூறினார்.
திருச்சி தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழ்நாடு வளர்ச்சி அடைய அடித்தளமிட்டவர் காமராஜர் தான். 1971ல் மதுவிலக்கை நீக்கியவர் கருணாநிதி. அவர் மூன்று தலைமுறைகளை வீணடித்து விட்டார். ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழித்து மூடிய பள்ளிக்கூடங்களை திறந்தவர் காமராஜர். 13 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். அவருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒரு நீர்பாசன திட்டத்தை கூட நிறைவேற்ற வில்லை.
தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவேரியை இன்று கொள்ளையடித்து விட்டார்கள். அதை நாம் காப்பாற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு 10 கிலோ மீட்டருக்கும் இடையே தடுப்பணை கேட்டோம். ஆனால், தமிழ்நாடு அரசு 20 மணல் குவாரிகளை தான் தந்துள்ளார்கள்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கிற்காக பணத்தையும், பொருளையும் கொடுத்தார்கள். ஆடு, மாடுகளைப் போல் மனிதர்களை பட்டியில் அடைத்து வைத்தார்கள்.
கல்வி, சமூக நீதி, நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றுக்கும் திமுக அரசுக்கும் சம்பந்தமே கிடையாது. இலவசக் கல்வி கொடுப்பது தான் அரசின் கடமை. இன்று மூன்றில் இரண்டு தனியார் பள்ளிகள் தான் உள்ளது. இது அரசின் தோல்வி.
கல்வி குறித்து பேசாமல் சட்டமன்றத்தில் டாஸ்மாக் குறித்து பேசுகிறார்கள். 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ளார்கள். அவர்கள் படித்தவர்களா, பண்புள்ளவர்களா, மக்களுக்காக பேசுவார்களா? காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவது எங்களால் தான் முடியும். தமிழ்நாட்டில் சாராய ஆட்சி, கஞ்சா ஆட்சி தான் நடக்கிறது” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஏற்புரை ஆற்றிய ஜிகே வாசன், காமராஜர் கடைபிடித்த நேர்மை, எளிமை, துாய்மை, வெளிப்படைத்தன்மை. இந்த தாரக மந்திரத்தை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். வரும் 2026ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
வருங்காலம் நல்ல காலம், வசந்த காலம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்று உறுதி ஏற்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காமராஜர் ஆட்சிக் காலத்தில் கல்வி, விவசாயம், சுகாதாரம், தொழில் என அனைத்திலும் தமிழகம், இந்தியாவின் முதல் மாநிலமாக திகழ்ந்தது.
தற்போது, தமிழகத்தில் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் நோயாளிகளைப் போல தமிழக விவசாயிகளின் நிலை உள்ளது. கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இருந்தும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை தட்டிக் கேட்காமல், தமிழக அரசு வாய் மூடி இருக்கிறது.
அரசியல் சாசனத்தை முன்வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுகின்றனர். மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் நாடகம் நடத்துகின்றனர். மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்க பார்க்கின்றனர். காவிரி பிரச்னை, நம்முடைய உயிர் பிரச்னை. காவிரி தண்ணீரைப் பெறுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து திமுக அரசு தவறுகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் உங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இனி எந்த காலத்திலும் தமிழக விவசாயிகள் உங்களை மன்னிக்க தயாராக இல்லை. அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னைகளில், கூட்டணி அரசியலுக்காக, ஓட்டுக்காக திமுக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம், விஷச்சாராயம் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தமிழகம் முன்னேறிக் கொண்டிருப்பது தான் திராவிட மாடலின் அடையாளம்.
கள்ளக்குறிச்சி மரணம், அரசியல் தலைவர்கள் மரணம், போதைப் பொருட்களால் மரணம், டாஸ்மாக் மரணங்கள் நிகழும் போது திமுக ஆட்சி செய்தது போதாதா ? உங்கள் ஆட்சியில் மக்கள் மாண்டது போதாதா? என்று கேட்கிறோம். தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய வேண்டும். காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும். அதற்கு ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றி பெறுவோம் என்று உறுதியேற்போம்” என பேசினார்.