ஜிஎஸ்டி காரணமாக புதுச்சேரியில் மது விற்பனை கடும் சரிவு!

புதுச்சேரி,

த்தியஅரசு கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி-ஐ அமல்படுத்தி உள்ளது. இதன் காரண மாக பொருட்களின் விலைவாசிகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில், ஜிஎஸ்டி காரணமாக புதுச்சேரியில் மது விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 25 சதவிகிதம் அளவுக்கு விற்பனை சரிந்துள்ளதாக கலால்துறை கூறியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், அங்கு குறைந்த விலையில் தரமான மது வகைகள் கிடைக்கும். தமிழகம் மற்றும் பக்கத்து மாநில குடிமகன்கள் அவ்வப்போது புதுச்சேரியை நோக்கி படையெடுப்பது வழக்கம்.

 

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்த நிலையில், புதுச்சேரியில் ஹோட்டல்கள், உணவகங்கள், மதுபானக் கூடங்களில் பரிமாறப்படும் மதுவுக்கு 6 சதவீதம் சேவை வரி திரும்பப் பெறப்பட்டது.

ஆனால், மதுபானம் குறைந்த விலையில் விற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மதுவிற்பனை  25 சதவிகிதம சரிந்து விட்டது என மதுபான விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, புதுச்சேரியில் மதுபான விற்பனை முற்றிலும் சரிந்து விட்டது. முன்பு பக்கத்துக்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மின்சாதனப் பொருள்கள், டைல்ஸ் போன்றவற்றை வாங்க வரும்போது, மதுபானத்தையும் வாங்கிச் செல்வர். தற்போது மேற்கண்ட பொருள்கள் விலையும் ஒரே மாதிரியாக உள்ளதால், வெளியில் இருந்து வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும் கூறி உள்ளார்.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் கூடாது என்ற  உச்ச நீதிமன்ற உத்தரவால் 164 மதுக் கடைகள் மூடப்பட்ட நிலையில் 12 சதவீதம் கலால் வருவாய் அரசுக்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.600 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மதுவிற்பனை பெருமளவு சரிவை  சந்தித்து  உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Alcohol prices 25% fall in Puducherry due to GST