சென்னை:
ந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், பார்களையும் மார்ச் 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது.
இதுகுறித்து, பா.ம.க. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 
இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் ஆணையிட்டு உள்ளனர். இந்தத் தீர்ப்பு நாடு போற்றும் நல்ல நடவடிக்கையாகும். பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி.
என்னால் தோற்றுவிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில், தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி அதன் தலைவர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் ஆணையிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மட்டும் மூட ஆணையிட்டது. அதன்படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 504 மதுக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகத் தான் நாடு முழுவதும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை களில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அதற்குப் பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.
மேலும், நகர்ப்புறம், கிராமப்புறம் வித்தியாசமின்றி மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக் கூடாது; நெடுஞ்சாலைகளில் இருந்து கண்ணுக்கெட்டும் தொலைவில் மதுக்கடை களே இருக்கக்கூடாது என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய அளவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேரின் உயிரையும், தமிழகத்தில் ஆண்டு 2 லட்சம் பேரின் உயிரையும் பறிக்கும் மதுவை முழுமையாக ஒழித்து மது இல்லாத தமிழகம் அமைப்பது தான் பா.ம.க.வின் நோக்கம். இந்த லட்சியத்தை எட்டி, மக்களைக் காப்பதற்காக பா.ம.க. தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.