ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோவில், அறியலுரு மாவட்டம் கீழப்பழுவூரில் அமைந்துள்ளது.
பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. சுவாமி ஆலந்துறையார் எனப்படுகிறார். இவ்வூர் மேலப்பழுவூர், கீழப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றான வடமூலநாதர் (ஆலந்துறையார்) கோவில் உள்ளது.
கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், “விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்”, என்றார்.
அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் அருந்தவநாயகி எனப்படுகிறாள்.
சுவாமியை தரிசிக்க திறந்தவெளி மண்டபம் தாண்டியுள்ள ஒரு வாயில் வழியே உள்ளே சென்றால் மகா மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் உள் பிராகாரத்திற்கான விசாலமான வழிகள் உள்ளன. அடுத்து, இடைமண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. கருவறை வாயிலின்மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஸ்ரீ வடமூலநாதர் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் அருட்காட்சி தருகிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கமானதால் இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகின்றது. மிகவும் அரிய தரிசனம் இது.
அம்பாள் இங்கு ஸ்ரீயோக தபஸ்வினி என்னும் திருநாமம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தமிழில் இந்த அம்பாளுக்கு அருந்தவ நாயகி என்று பெயர். மகாதபஸ்வினி என்று அம்பிகை துதிக்கப்படுகிறாள். யோகக் கலையையும் திருமண வரத்தையும் ஒருசேர அளிப்பவள் இவள். அகிலாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த புண்ணிய திருத்தலம் திருப்பழுவூர். இதன் காரணமாக இத்தலம் யோக வனம் எனப்பட்டது.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.