மும்பை:
டிகர் அக்ஷய் குமார் பான் மசாலா பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்களிலேயே நடிகர் அக்சய் குமார் மிகவும் வித்தியாசமானவர். இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகள், மது விருந்துகள் என அனைத்தும் மும்பை திரையுலகில் மிகவும் சகஜம். நடிகர் – நடிகைகள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது என்பது அங்கு சர்வ சாதாரணம். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தினமும் வெளிவரும் அளவுக்குதான் பாலிவுட் நட்சத்திரங்களின் வாழ்க்கை முறை இருக்கிறது. ஆனால், நடிகர் அக்சய் குமார் இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்.

நடிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே அவரை இதுபோன்ற இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளிலோ, மது விருந்திலோ யாரும் பார்த்தது கிடையாது. உடல் ஆரோக்கியத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகரான அக்சய், அதிகாலை 4 மணிக்கு தவறாமல் ஜாங்கிங் செல்லும் வழக்கம் உள்ளவர். அதனால் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதில்லை. அதே போல, புகைப்பிடிப்பது, மது அருந்துவது, பான் மசாலா பயன்படுத்துவது போன்ற பழக்கமும் அக்சய் குமாருக்கு கிடையாது. இதனை பல முறை அவரே தனது பேட்டிகளில் கூறியுள்ளார். தனது ரசிகர்களையும் இதுபோன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு அவர் வலியுறுத்தி இருக்கிறார். அந்த வகையில், நடிகர் அக்சய் குமாரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. சிகரெட், மதுபான விளம்பரங்களிலும் அக்ஷய் குமார் நடித்ததில்லை. இது, அவர் மீதான மரியாதையை மேலும் அதிகரிப்பதாக இருந்தது.

ஆனால், இத்தனை வருடங்களாக தான் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்கள் அனைத்தையும் ஒரே விளம்பரத்தில் காலி செய்து விட்டார் அக்சய். விமல் என்ற குட்கா நிறுவனத்தின் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் அக்ஷய் குமார் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

அந்த விளம்பரத்தில் அக்சய் குமார் மட்டுமின்றி நடிகர்கள் ஷாருக் கானும், அஜய் தேவ்கானும் நடித்திருக்கின்றனர். ஒருசில தினங்களுக்கு முன்புதான் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது. விளம்பரம் வெளியான நாளில் இருந்து நடிகர் அக்ஷய் குமாரை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், அவரை கடுமையாக ட்ரோலும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பான் மசாலா பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலகுவதாக அக்ஷய் குமார் அறிவித்துள்ளார். மேலும் எதிர்கால விளம்பர தேர்வுகளில் கவனமாக இருப்பேன் என்று உறுதியளித்தார்.