சண்டிகர்
நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம் கட்சி தனது 64 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
பாஜகவுடன் கடந்த 1977 ஆம் ஆண்டில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் கட்சி கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணி நகமும் சதையும் போல என அகாலி தளம் கட்சி மூத்த தலைவர் பிரகாஷ் பாதல் குறிப்பிட்டிருந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் இந்த கூட்டணி ஒன்றாகப் போட்டியிட்டன.
பாஜக கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையொட்டி அகாலி தளம் கட்சி மக்களவை உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து அகாலி தளம் கட்சி முழுமையாக விலகியது.
அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அகாலிதளம் கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த சட்டப்பேரவை தேர்தலை இணைந்து சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் பலம் பொருந்தியதாக உள்ளதால் இந்த கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் அகாலிதளம் 97 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களிலும் போட்டியிடும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தற்போது அகாலிதளம் கட்சி பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான 64 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.