
லக்னோ: சில பல முட்டல் – மோதல்களுக்கு இடையில் சமாஜ்வாடி கட்சியின் தலைமைப் பதவியை ஏற்ற அகிலேஷ் யாதவிற்கு, தற்போது தொடர்ச்சியாக 3வது தேர்தல் தோல்வி பரிசாக கிடைத்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு அவர் அதிகாரப்பூர்வ கட்சித் தலைவராக பதவியேற்கவில்லை என்றாலும், அந்த ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலை அவர்தான் பொறுப்பேற்று நடத்தினார். ஆனால், அத்தேர்தலில் அவரின் கட்சிக்கு கிடைத்ததோ வெறும் 5 இடங்கள்.
அதற்கு முந்தைய தேர்தலில் பெற்றிருந்த 23 இடங்கள், அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்து சந்தித்த அந்த மக்களவைத் தேர்தலில் 5ஆக குறைந்தது.
இது ஒருபுறம் என்றால், அடுத்த சோதனை 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேர்ந்தது. காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலுக்கு முந்தையக் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தவர், ஆட்சியை இழந்ததோடு, வெறுமனே 47 இடங்களை மட்டுமே வென்றார். அதற்கு முன்பாக அவரிடம் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 224.
பின்னர், இந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். பெரிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கூட்டணியும் சொதப்பியது.
சமாஜ்வாதி கட்சிக்கு கிடைத்தது மீண்டும் 5 இடங்களே. இதில், அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் உட்பட சில முக்கிய குடும்ப உறுப்பினர்களே தோல்வியைத் தழுவினார்கள். மேலும், அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளும் 17.90% என்ற அளவில் பெரிய சரிவை சந்தித்துள்ளது.
ஆனால், இத்தேர்தலில் 2014ம் ஆண்டு ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் தோல்வியடைந்த பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]