டில்லி: அடுத்த ஆண்டு துவக்கத்தில் (2022ம் ஆண்டு) நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உ.பி. மாநிலத்தில் 2022 மார்ச் அல்லது ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. இதனால், அங்கு 4முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணிகள் ஏற்பாடு வாய்ப்பு உள்ள நிலையில், இப்போது சில சிறிய கட்சிகளை வளைக்கும் பணியில் மாநில கட்சிகளும், காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவரு மான அகிலேஷ் யாதவ், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்து உள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்காக தனது கட்சிக்கும் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சிக்கும் இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது” என்று கூறினார்.
மாமா ஷிவ்பால் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி லோஹியாவை (பிஎஸ்பிஎல்) தேர்தலில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தவர், “எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவருக்கும் அவரது ஆட்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும்” என்று கூறினார்.