டெல்லி:
உபி.யில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
உ.பி. சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது தொடர்பாக ஆளும் சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் அகிலேஷ்யாதவுக்கும், முலாயம் சிங்குக்கும் பனிப்போர் வெடித்தது. இதனால் கட்சி நிர்வாகிகளுடன் அகிலேஷ் யாதவ் போட்டிக் கூட்டம் நடத்தி முலாயம் சிங்கை கட்சியில் இருந்து நீக்கினார்.
எம்எல்ஏ, எம்பி.க்கள் ஆதரவு, பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக அகிலேஷ் தெரிவித்தார். இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியுடன் அகிலேஷ் கூட்டணி அமைத்தார்.
சமாஜ்வாடி சின்னமான சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற முலாயம் சிங்குக்கும், அகிலேஷூக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் தனித்தனியே தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தனர். எம்பி, எம்எல்ஏ.க்களின் ஆதரவை பெற்று அவர்களது தனித்தனியான உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
பெரும்பாலான எம்பி, எம்எல்ஏ.க்களின் ஆதரவு அகிலேஷூக்கு கிடைத்தது. இதற்கான உறுதிமொழி பத்திரங்கள் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் யாதவுக்கு ஒதுக்கி தேர்தல் கமிஷன் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அகிலேஷ் யாதம் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கிகாரம் அளித்துள்ளது. இதனால் உபி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.