சென்னை
தமிழக அரசிடம் இன்று ஏ கே ராஜன் குழு அளித்த நீட் தேர்வு குறித்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. தற்போதைய திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது. இது குறித்த விவரங்களை ஆய்வு செய்ய ஏ கே ராஜன் தலைமையில் ஒரு குழுவைத் தமிழக அரசு அளித்தது. இன்று காலை அந்தக் குழு தமிழக அரசிடம் ஆய்வறிக்கையை அளித்தது.
அந்த அறிக்கையில், “நீட் தேர்வு குறித்து இணையதளம் மற்றும் நேரடியாகப் பொதுமக்களிடம் இருந்து 86,462 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு, அப்போதைய திமுக அரசு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதற்காகத் தொழிற்கல்வி நுழைவுத்தேர்வு தடை சட்டத்தை இயற்றியுள்ளது
எனவே, இந்த சட்டம் மூலமாகவே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற முடியும். மேலும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.