சென்னை: பொங்கலுக்கு வெளியாக உள்ள, விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதி கிடையாது( என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வாரிசு, துணிபு படங்களுக்கான போஸ்டர்கள், விளம்பர போர்டுகள், கட்அவுட்டுகள் மாநிலம் முழுவதும் ரசிகர்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில்,சிறப்பு காட்சிகளை ரத்து செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
நடிகர் அஜித் – ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள ‘துணிவு’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஜன.11) வெளியாக உள்ளது. மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த இந்த வாரம் வெளியாவதையொட்டி பல தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள், அதிகாலை மற்றும் நள்ளிரவு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் உருவாக்கப்பட்டள்ளது. இதில், விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி & குடும்பத் திரைப்படம். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல தென்னிந்திய முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 66 வது திரைப்படமாகும். வாரிசு திரைப்படத்தினை பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, தெலுங்கு திரையுலக முன்னனி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார்.
இந்த படங்களை வெளியாக இருந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தியேட்டர் வளாகத்தில் பெரிய பேனர் வைப்பதற்கு, பாலாபிஷேகம் செய்வதற்கும் அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட்டுகளில் இதுதொடர்பாக புகாரளிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் நாளை (ஜனவரி 11) ரிலீசாகவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி வரையிலான காட்சிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. மேலும் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் காட்சிகளை ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சியும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் முதல் காட்சியும் திரையிடப்படுகிறது.