மும்பை

டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் டிஜிடல் டிவி ஆகிய இரு நிறுவனங்களும் இந்த மாத இறுதியில் இணைய உள்ளன.

டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆகிய இரு நிறுவனங்களும் டி டி எச் ஒளிபரப்பை வீடுகளுக்கு அளித்து   வருகின்றன. ஏர்டெல் டிஜிட்டல் டிவி நிறுவனம் சுனில் பாரதி மிட்டல் நடத்தும் நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள் இரண்டும் இணைய உள்ளதாகக் கடந்த மார்ச் மாதம் முதல் செய்திகள் வருகின்றன. இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஹாத்வே கேபிளுடன் இணைந்து இணையம் மற்றும் டிடிஎஷ் சேவையைத் தொடங்கி உள்ளது.

இது குறித்து இரு நிறுவன அதிகாரிகளும் தகவல் அளித்துள்ளனர். அதில் ஒருவர், “டிஷ் டிவியின் ஒரு பகுதி பங்குகள் எஸ்ஸெல் குழுமத்தின் ஜீ டிவியிடம் உள்ளன. அவர்கள் அந்த பங்குகளை விற்பதில் மும்முரமகைருந்தன்ர். எனவே தற்போது இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்த இணைப்பு குறித்து இறுதி முடிவு எடுத்துள்ளன. இந்த மாத இறுதியில் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளிவரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு அதிகாரி, “இந்த இணைப்பு மிகவும் சிக்கலான ஒன்றாகும். இது குறித்துப் பல விவாதங்கள் நடைபெற்றன. இவற்றில் பல வரிகள் தொடர்பானதாகும். மூன்று நிறுவனங்களுடைய வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து  இந்த ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடைந்து அறிவிப்பு வெளிவரக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ் டிவி இணைப்பின் மூலம் இந்த புதிய நிறுவனம் உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமாக உள்ளது. இந்த இரு நிறுவனங்களிலும் மொத்தம் 3 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இது  இந்திய டிடிஎச் சந்தையில் 61% ஆகும்.