டெல்லி: ஜூன் மாத பயணத்திற்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்ட ஊரடங்கு இந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை அனைத்து விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் ஜூன் மாத பயணத்திற்கான விமான டிக்கெட் முன் பதிவுகளை சில விமான நிறுவனங்கள் தொடங்கி இருக்கின்றன. இண்டிகோ மற்றும் விஸ்டாரா ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு விமானங்களுக்கு முன்பதிவு செய்வதாகக் கூறி உள்ளன.
ஆனால், ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், எங்கள் சர்வதேச முன்பதிவு ஜூன் 15 வரை மூடப்பட்டுள்ளது என்று கூறினார். முன்பதிவு தொடங்குவது குறித்து இண்டிகோ, விஸ்டாரா மற்றும் கோ ஏர் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் இல்லை.
முன்னதாக, ஏர் இந்தியா மத்திய அரசிடமிருந்து உத்தரவு வந்த பின்னரே உள்நாட்டு விமானங்களை மீண்டும் தொடங்குவதாக கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.