டில்லி,

விமான நிறுவனங்களுக்க அளிக்கப்பட்ட செக் மோசடி வழக்கிலும் விஜய் மல்லையாவை குற்றவாளி என அறிவிக்க கோரி விமான நிறுவனங்கள் டில்லி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளன.

தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக இந்தியாவின் பல்வேறு வங்கி களில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றார். இந்தக் கடன்களை அவர் திருப்பிச் செலுத்தவில்லை. இது குறித்து வங்கிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ.,வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதைத்தொடர்ந்து வெளிநாட்டுக்கு சென்ற  மல்லையா லண்டனில் வாழ்ந்து வருகிறார். அவரை கைது செய்ய இந்தியா கோரியதை தொடர்ந்து,  பண மோசடி தொடர்பாக லண்டன் போலீசார்   கைது செய்து, உடனே ஜாமினிலும் விடுதலை செய்தனர்.

இந்நிலையில்,  விமானம் தரையிறங்குவது, விமானத்துக்கான பார்க்கிங் மற்றும் வழிகாட்டி தகவல்கள் பெறுவது போன்றவற்றிற்காக விஜய்மல்லையா நிறுவனம் அளித்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.

ஏற்கெனவே பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா குற்றவாளி என கோர்ட்டு அறிவித்துள்ள நிலையில், தற்போது  இந்த வழக்கிலும் அவரைக் குற்றவாளி என அறிவிக்குமாறு ஆணையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின்  விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.