கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தினசரி 250 பேருந்துகளை MSRTC இயங்கிவருகிறது, அதேபோல் கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு 120 பேருந்துகளை KSRTC இயக்கி வருகிறது.

இருமாநில எல்லையை ஒட்டிய பகுதியில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிக்கும் நடத்துனருக்கும் இடையே மூன்று நாட்களுக்கு முன் மொழி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அது இரண்டு மாநில பிரச்சனையாக உருவெடுத்தது.

இதனால் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து இரு மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பேருந்து மறியல் மற்றும் கருப்பு மை பூசுவது போன்ற செயல்களில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மும்பையில் இருந்து பெங்களூரு செல்வதற்கான விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு வழக்கமாக வசூலிக்கப்படுவதை விட மூன்று மடங்கு அதிகமாக ரூ. 10000 முதல் ரூ. 12000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், இந்த பிரச்சனையை தீர்க்க இந்த இரண்டு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இடையே பேச்சு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.