டெல்லி:
தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு மாசு நிலவி வரும் சூழலில், இதுகுறித்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நகரஅபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல், பாஜகவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பாஜக எம்.பி. ஹேமமாலைனி ஆகியோர் புறக்கணித்தது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில், ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநில அரசின் கூட்டத்தை பாஜக எம்.பி.க்கள் புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து உச்சநீதி மன்றமும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், காற்று மாசு தொடர்பாக மாநில அரசு சார்பில், நகர அபிவிருத்தி குழுவின் கூட்டம் நடை பெற்றது. இதில், டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி.யான கவுதம் கம்பீர் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதுபோல ஹேமமாலினியும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
அதேவேளையில் கம்பீர், இந்தூரில் நடைபெற்று வரும் வங்கதேச அணியுடனான இந்திய கிரிக்கெட் அணி மோதும் போட்டியின் வர்ணனையாளராக பங்கேற்பதற்காக சென்று விட்டார். அது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி, கம்பூர் மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மக்கள் சுவாசிக்கவே, திண்டாடி வரும் நிலையில், அது தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில், அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் அரசியல் பழிவாங்கலில் மும்முரமாக ஈடுபட்டு வருவது, வாக்களித்த மக்களுக்குப் கடுமையான ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்துக்கு 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) அழைக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு பேர் மட்டுமே வந்திருந்ததால், நடைபெற இருந்த நகர்ப்புற மேம்பாட்டு நாடாளுமன்றக் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வந்த நான்கு எம்.பி.க்களில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் என்பவரும் ஒருவர்.
இதனால் கடுப்பான டெல்லிவாசிகள், சமூக வலைதளங்களில் #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டிடாக்கினர். அத்துடன் டெல்லியில் பல இடங்களில் கம்பீரை காணவில்லை என்கிற போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதால் வேறுவழியே இல்லாமல் கம்பீர் விளக்கம் ஒன்றையும் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.