சென்னை:

இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னலில் மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தில் தென்னிந்திய சி.இ.ஓ. சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

செல்போன் டவர் நிறுவனத்திற்கும் ஏர்செல் நிறுவனத்திற்கும் இடையிலான  பண விவகாரத்தினால், டவரை நிர்வகிக்கும் நிறுவனம் திடீரென இழுத்து மூடியதால் நாடு முழுவதும் கடந்த வாரத்தில் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல் ஷோரூம்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில் செல்போன் டவர் நிறுவனத்துடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த இரு தினங்களாக ஏர்செல் சேவை சீரடைந்து வந்தது.

இதற்கிடையே இன்று மாலையில் இருந்த சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று ஏர்செல் நிறுவன தென்னிந்திய செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

டவர் நிறுவனம் மீண்டும் பிரச்னையை எழுப்பியுள்ளதால்,  ஏர்செல் நிறுவனம் மூலம் அதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் பணப்பரிமாற்றம், கேஸ்புக்கிங் உள்ளிட்டவற்றிற்கு ஏர்செல் சிம்கார்டுகளை மட்டுமே வைத்துள்ளவர்கள் மாலைக்குள் அதனை செய்து விடும்படியும் சங்கரநாராயணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும்  அவர் தெரிவித்துள்ளார்.