டெல்லி:
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதன், மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை பிப்.8ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
ஏர்செல் -மேக்சிஸ் முறைகேடு வழக்கை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என கூறி நீதிபதி ஷைனி விடுதலை செய்தார்.இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல்முறையீடு செய்தது. விடுதலைக்கு எதிராகவும், வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க டெல்லி நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராகவும் மனுவில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை பகல் 2 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய என்ன காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை தயார் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விரிவான பதிலை வரும் 8ம் தேதி தெரிவிக்கும்படி கூறி விசாரணையை ஒத்தி வைத்தது.