டில்லி:

சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில்,  இன்னும்  இரண்டு ஆண்டுகளில் நாட்டில் ஓடும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் வசதி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2019ம் ஆண்டு ஜுலை முதல் அனைத்து வகையான கார்களிலும் ஏர்பேக் வசதி, வேகமாக செல்லும் போது ஒலி எழுப்பும் ஏர்ஹார்ன் வசதி இருக்க வேண்டும் என அனைத்து  கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அதை தடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

சாலை விபத்து காரணமாக ஒரு நாளைக்கு 9 பேர் மரணம் அடைவதாகவும்,  நாடு முழுவதும் ஆண்டு தோறும்   74000 சாலை விபத்துக்களால்  1.51 லட்சம் உயிரிழக்கின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில்  விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்கும் வகையில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சில பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி தற்போது ஆடம்பரம் விலை உயர்ந்த  கார்களில்  உள்ள ஏர்பேக் உள்பட விபத்துக்களால் பாதிப்பு ஏற்படாத வகையான  பாதுகாப்பு அம்சங்களை அனைத்து வகை  கார்களிலும் பொருத்தும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என மத்திய  அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வகையான கார்கள்  வரும்  2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதிக்குப் பின்னர் தயாரிக்கப்படும் அனைத்து வகைக் கார்களிலும் இருக்க வேண்டும் என்றும், இந்த  மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும்  மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி காரில் இருப்பவர்கள்  சீட் பெல்ட் அணியும் வகையில் நினைவூட்டல் அலாரம்,  மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் தானாக சப்தம் செய்யும் ஒலிப்பான், ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை ஒலி, ஏர்பேக், ஏபிஎஸ் சிஸ்டம், விபத்து மற்றும் அவசரகாலத்தில் காரை விட்டு வெளியேறும் வகையில் இருக்கும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டமும் இருக்க வேண்டும் என்பது  போன்ற பல்வேறு  பாதுகாப்பு அம்சங்களும் காரில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது