டெல்லி: நாடு முழுவதும் நாளை முதல் விமானக் கட்டணங்கள் உயர்கின்றனர். டிஜிசிஏ பாதுகாப்புக் கட்டணத்தை மத்தியஅரசு உயர்த்தியதால் விமான பயணக் கட்டணம் உயர்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், விமானப் பயணத்திற்கான கட்டணங்கள் உயரும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த மார்ச் 19 தேதியே டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது .புதிய கட்டணங்கள் 2021 ஏப்ரல் முதல் பயணம் மேற்கொள்வதற்கான பயணச்சீட்டுகளுக்கும் பொருந்தும் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கு விமான பயணக் கட்டணம் விலை உயரும் என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
விமானப் பாதுகாப்பு கட்டணத்தை (air security fee (ASF)) உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் டிக்கெட் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.எஸ்.எஃப் என்பது விமான டிக்கெட்டுகளின் கூறுகளில் ஒன்றாகும், இது நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நிதியளிக்கப் பயன்படுகிறது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களின் பாதுகாப்பை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை கவனித்து வருகிறது.
அதன்படி, தற்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணம் ரூ .40 ஆகவும், சர்வதேச விமான பயணிகளுக்கு ரூ .114.38 என்ற அளவிலும் உயரும் என கூறப்படுகிறது. உள்நாட்டு பயணிகளுக்கான விமானப் பாதுகாப்பு கட்டணம் பயணிகளுக்கு 200 ரூபாய் வீதம் விதிக்கப்படும். சர்வதேச பயணிகளுக்கான விமானப் பாதுகாப்பு கட்டணம் 12 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு சமமான இந்திய ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் 2021 ஏப்ரல் 1 அல்லது அடுத்த சில நாட்களில் அமலுக்கு வரும் என நம்பப்படுகிறது.
விமான கட்டண உயர்வில் இருந்து, இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், அரசு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், பணியில் உள்ள விமான ஊழியர்கள், இந்திய விமானப்படையால் இயக்கப்படும் விமானத்தில் உத்தியோகபூர்வ கடமையில் பயணிக்கும் நபர்கள், ஐ.நா அமைதி காக்கும் பணி கடமையில் உள்ளவர்கள், உட்பட சிலருக்கு சிறப்பு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எரிபொருள் விலையேற்றம் காரணமாக, விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது பாதுகாப்பு பட்டணத்தை மத்தியஅரசு உயர்த்தி உள்ளதால், பயணக் கட்டணம் உயர்வது தவிர்க்க இயலாதது என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.