போபால்:

ஆட்டோ கட்டணத்தை விட இந்தியாவில் விமான கட்டணம் குறைவாக உள்ளது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த 27வது சர்வதேச மேலாண்மை கருத்தரங்களில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவாக உள்ளது. நான் முட்டாள் தனமாக பேசுவதாக சிலர் கூறுவார்கள்.

ஆனால் இது உண்மை. இந்தூரில் இருந்து டில்லி செல்ல விமானங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு பயணிகள் ரூ. 5 மட்டுமே கட்டணமாக செலுத்துகின்றனர். ஆனால், நகரில் ஒரு ஆட்டோவைக்கு வாடகைக்கு எடுத்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 8 முதல் 10 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

உலகிலேயே இந்தியாவில் தான் விமான கட்டணம் குறைவு என்பதால் பலரும் விமானங்களில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். சாதாரண செருப்பு (ஸ்லிப்பர்) அணியும் சாதாரண மனிதர்கள் கூட தற்போது விமானங்களில் பறக்கின்றனர் என்று அருண்ஜெட்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 11 கோடியாக இருந்தது. தற்போது இது 20 கோடியாக உயர்ந்துள்ளது. இதை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதை 5 மடங்காக்கி 100 கோடியாக உயர்த்தப்படும். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதாரண மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கச் செய்து அமெரிக்கா, சீனா போன்ற பெரும் பொருளாதார நாடுகளை முந்த வேண்டும்’’ என்றார்.