சென்னை: விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை உள்பட முக்கிய பகுதிகளில் ஒரு வாரத்துக்கு டிரோன்கள் ( Drone) போன்று எந்த விதமான பொருட்களும் பறக்கவிட காவல்துறை தடை விதித்துள்ளது
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான வான் சாகச ஒத்திகை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 6-ல் சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்திய விமானப்படை 1932 ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. இதையடுத்து ஆண்டு தோறும் அக்டோபர் 8 அன்று நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 8-ம் தேதி 92-வது இந்திய விமானப் படை தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் ஏர்ஷோ எனப்படும் விமான சாகச நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அக்டோபர் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சிகளும், சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு பயிற்சியும் நடத்தப்படுகிறது.
அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் வான்வழி சாகச நிகழ்ச்சிகளும், அக்டோபர் 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த விமானப்படை சாகச நிகழ்வில், வானில் லாகவமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை தங்களது வான்கலைகளால் மக்களை பரவசத்தில் ஆழ்த்த உள்ளன.
வரும் 6-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை இந்த சாகச நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதில் அரோக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூர், சூளுர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து 72 விமானங்கள் பங்கேற்க உள்ளது.
அதேபோல் அக்டோபர் 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி காலை 7:30 மணி முதல் 11 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேலும், விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு சென்னை மெரினாவில் சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனை உலக சாதனையாக நிகழ்த்த உள்ளோம். சென்னையின் அனைத்து மக்களும் இதனை கண்டு களிக்க வேண்டும் என விமான படை அதிகாரிகள்அழைப்பு விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையம் குறிப்பிட்ட இரண்டுமணி நேரம் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் சென்னையில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் 6-10-2024 அன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனை முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது.”
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.