டில்லி,
கடந்த ஆண்டு மட்டும் இந்தியா மற்றும் சீனாவில்16 லட்சம் பேர் காற்று மாசினால் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல்களை கிரீன் பீஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.
உலக அளவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலங்களில் காற்று மாசுபாடு காரணமாக கடுமையான போக்குவரத்து பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து கிரீன்பீஸ் அமைப்பு உலக அளவில் ஆய்வு நடத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 14 ஆண்டுகளாக இந்த அமைப்பு நாடு முழுவதும் காற்று மாசு குறித்துஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் 16 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
படிம எரிபொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தியதன் காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் காற்று மாசுபாடு வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்தியா உள்பட நடுத்தர வருமானம் உள்ள 10 நாடுகளில் காற்று மாசுபாடுகளினால் மக்களின் மரணம் அதிகமாக நிகழ்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என்றும்,
2015-ம் ஆண்டில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் இந்தியா மற்றும் சீனாவில் முறையே 138 மற்றும் 115 பேர் இறந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் டில்லியில் ஏற்பட்ட காசு மாசுவினால் பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்கள் ஒரு வாரமாக அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.