டில்லி,
காற்று மாசு காரணமாக தலைநகர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காற்று மாசில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவை சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மனித குலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கக் கூடிய கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் காற்றில் கலக்கப்படுவதால், சுற்றுச்சூழலுக்கும் மனிதர்கள் சுவாசிப்பதற்கும் பெரும் கேடு விளைந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே சீனாதான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அந்த நாடு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை காரணமாக அது முன்னேறி சென்றுள்ளது. இந்த நிலையில், அதிக அளவிலான ரசாயண ஆலைகள் காரணமாகவும், அதிலிருந்து வெளியேறும் புகை காரணமாகவும் வளி மண்டலம் மாசடைந்து உள்ளது.
இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா 50 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்து காற்று மாசில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காற்று மாசில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காற்று மாசு காரணமாக சுவாச பிரச்சினை ஏற்படுவதால், இந்தியர்களின் ஆயுட்காலம் குறைவதாகவும், இந்தியாவில் 3 கோடியே 30 லட்சம் பேரும், சீனாவில் சுமார் 9 கோடியே 90 லட்சம் பேரும் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.