லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த விமானம் லண்டனில் பத்திரமாக தரையிங்கி உள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் சர்வதேச விமான நிலையத்திற்கு 231 பயணிகள் மற்றும் 18 விமான ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் சர்வதேச நேரப்படி காலை 06.54க்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் ஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் இருந்த தொடர்புகள் திடீரென துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக விமானம் என்ன ஆனது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், அந்த விமானம் சர்வதேச நேரப்படி 11.06 மணிக்கு லண்டனில் உள்ள ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும்,, அலைவரிசையில்ஏற்பட்ட திடீர் கோளாறு மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாகவே விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்றும், இதன் காரணமாக இந்திய விமான படையின் ஜெட் விமானம், அந்த விமானத்துடன் பாதுகாப்பிற்காக சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து விமானம் காணாமல் போனது குறித்த பரபரப்பு அடங்கியது.