புதுடெல்லி: ஹஜ் பயணம் மேற்கொண்டு, புனித ஸம் ஸம் நீர் கொண்டுவரும் பயணிகளுக்கு, 5 கிலோ வரை கூடுதல் லக்கேஜ் சலுகை வழங்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; பொதுவாக, வளைகுடாப் பகுதியில் இயக்கப்படும் விமானங்களில் பயணம் செய்வோருக்கான அதிகபட்ச லக்கேஜ் அளவு 40 கிலோ மட்டுமே. ஆனால், ஸம் ஸம் நீருக்காக 5 கிலோ அளவிற்கு கூடுதல் லக்கேஜ் சலுகை வழங்கப்படுகிறது.

அதேசமயம், இந்த சிறப்பு சலுகை ஸம் ஸம் நீருக்கு மட்டும்தான். இந்த சலுகையை வேறு பொருளுக்குப் பயன்படுத்த முடியாது. முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனம் B747 மற்றும் B777 விமானங்களை ஜெட்டாவிலிருந்து இயக்கியது.

இவற்றில், B747 விமானத்தில் பயணம் செய்வோருக்கு, ஸம் ஸம் நீர் இல்லையென்றாலும் 45 கிலோ வரை லக்கேஜ் எடுத்துவர அனுமதிக்கப்பட்டது. அதேசமயம், B777 விமானத்தில் பயணம் செய்வோருக்கு ஸம் ஸம் நீர் கொண்டுவந்தாலும் அதிகபட்சம் 40 கிலோ லக்கேஜ் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

ஆனால், இந்தமுறை B747 விமானம் பிரத்யேகமாக ஹஜ் பயணிகளுக்காக இயக்கப்படுவதால், ஸம் ஸம் நீருடன் சேர்த்து மொத்தம் 45 கிலோ வரை லக்கேஜ் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.